சரத் பொன்சேகா மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய "துர்கா"வுக்கு உதவியதாக 03 விடுதலைப் புலி சந்தேக நபர் மீதான வழக்கு இன்று

2 months ago




கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரி "துர்கா"வுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் 230 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றது.

இதன்போது, முறைப்பாட்டாளர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் வழக்கு மேலதிக விசாரணைக்காக நாளை (29) வரை ஒத்திவைக்கப்பட்டது.

பிரதிவாதிகளான மோரிஸ் எனப்படும் செல்வராசா கிருபாகரன், சண்முகலிங்கம் சூரியகுமார் மற்றும் தம்பையா பிரகாஷ் எனப்படும் தனுஷ் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

2006 ஆம் ஆண்டு, கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீது தற்கொலை குண்டுதாரி தாக்குதல் நடத்தி அவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்தியது மற்றும் அவரது மெய்க்காப்பாளர்கள் மூவரைக் கொல்ல உதவியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.