இந்து சமுத்திரத்தின் கடல் மலையில் கோபல்ட் தனிமம் குறித்த ஆய்வில் ஈடுபடும் இந்தியாவின் முயற்சிக்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இதை யடுத்து இரு நாடுகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.
இந்து சமுத்திரத்தின் அபனாசி நிக்கிட்டின் கடல் மலை பகுதியில் உள்ள கோபல்ட் தனிமம் குறித்து ஆய்வில் ஈடுபட கிங்ஸ்டன் ஜமைக்காவில் உள்ள சர்வதேச கடற்படுக்கை அதிகார சபையிடம் இந்தியா விடுத்துள்ள வேண்டுகோ ளுக்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்தே இரு நாடுகளுக்கும் இடையே இந்த விடயம் தொடர்பில் சர்ச்சை மூண்டுள்ளது என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
அந்த செய்தியில் மேலும் தெரி விக்கப்பட்டவை வருமாறு,
இந்தியா கோபல்ட் தனிமம் குறித்து ஆய்வில் ஈடுபட விரும்பும் பகுதி தனது விரிவாக்கப்பட்ட கண்ட அடுக்குக்குள் உள்ளது என்று இலங்கை தெரிவித்துள்ளது. அத்துடன், கண்ட அடுக்கின் வரம் புகள் குறித்த ஐக்கிய நாடுகளின் ஆணைக் குழு தனது கண்ட அடுக்கு வேண்டுகோள் குறித்து தீர்மானிக்கும் வரை புதுடில்லியின் வேண்டுகோளை ஏற்கக் கூடாது என்றும் இலங்கை கூறியுள்ளது.
இலங்கையின் கண்டமேடை கோரிக்கைகள் இந்தியாவின் கோரிக்கையுடன் முரண்படுகின்றன. இதனாலேயே 2009 முதல் இந்த விவகாரத்துக்கு தீர்வு காணமுடியாத நிலையில் ஐ. நாவின் கண்ட அடுக்குகள் வரம்பு குறித்த ஆணைக்குழு உள்ளது.
இந்த முட்டுக்கட்டை நிலைக்கு இரு தரப்பு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் இரு நாடுகளும் உள்ளன. எனினும் கடந்த ஒன்றரை தசாப்தங்களாக அது சாத்தியமாகவில்லை.
இந்தியாவில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போது, பா. ஜ. க., தமிழ்நாடு மீனவர்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு காங்கிரஸ் கட்சியும் தி. மு. கவும் இலங்கைக்கு கச்சதீவை தாரை வார்த்தது குறித்து எழுப்பிய சர்ச்சையை தொடர்ந்தே கோபல்ட் தொடர்பான சர்ச்சை மீண் டும் சூடுபிடித்துள்ளது.