தமிழ் பொதுவேட்பாளர், நாங்கள் ஓரணியில் உள்ளோம் என்பதை எடுத்துரைக்க நல்ல சந்தர்ப்பம் - மாவை சேனாதிராசா தெரிவிப்பு
“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் மீண்டும் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்கிறார்கள் என்பதை அனைத்து தரப்புக்கும் எடுத்துச் சொல்வ தற்கு நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழ்ப் பொதுவேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தும் முடிவை நான் வரவேற்கிறேன்." என்று தெரிவித்துள்ளார் இலங்கைத் தமி ழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.
தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை ஒரு மக்கள் ஆணை பெறும் விடயமாக அல்லாமல் நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதை மீண்டும் தெளிவாக எடுத்துரைப்பதற்கான சந்தர்ப்பமாக பயன்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
டான் தொலைக்காட்சியில் பிரதி ஞாயிறு தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ஸ்பொட்லைட் நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தும் முடிவு தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது முடிவை இன்னும் அறிவிக்காத நிலையிலேயே மாவை சேனாதிராசா இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத் தும் முடிவுக்கு தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தரப்பினர் பகிரங்கமாக எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில் மாவை சேனாதிராசாவின் இந்தக் கருத்து வெளி யாகியுள்ளது.
பொது வேட்பாளர் விடயம் குறித்து மாவை சேனாதிராசா மேலும் தெரி விக்கையில்-
தமிழ்ப் பொது வேட்பாளரை ஜனாதி பதித் தேர்தலில் நிறுத்தும் முடிவு குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. ஆயினும் இந்த விடயத்தை நான் வரவேற்கிறேன்.
இதனை மக்கள் ஆணை பெறும் விட யமாக அல்லாமல் நாங்கள் அனை வரும் ஒன்றுபட்டு ஒரு முடிவில் இருக்கிறோம் என்பதை மீண்டும் தெளிவாக எடுத்துச் சொல்வதற்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தலாம். இதன் மூலம் தமிழ் மக்கள் அனைவரும் ஒரே முடிவில் உள்ளார்கள் என்பதை அனைத்து தரப்பினரும் இலகுவில் புரிந்துகொள்வார்கள்.
கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தலில் பேரினவாதக் கட்சிகளுக்கு வழங்கிய ஆதரவினால் எதுவுமே நடைபெற வில்லை. தமிழ் மக்களாகிய நாம் ஏமாற்றப்பட்டதே வரலாறு. தமிழ் அரசியல் தரப்புகளையும் தமிழ் மக்களையும் பேரினவாதக் கட்சிகள் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன. இம்முறை இதற்கு இடமளிக்காமல் தமிழ் பொது வேட்பாளர் ஒரு வரை நிறுத்தி எமது ஒன்றுபட்ட பலத்தை நிரூபிக்கமுடியும் - என்றார்.