திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவை முன்னிட்டு விசேட பிரார்த்தனை நிகழ்வு

1 month ago




திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் உயிரிழந்தவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவை முன்னிட்டு விசேட பிரார்த்தனை நிகழ்வு குறிஞ்சாக்கேணி பாலம் முன்பு நடைபெற்றது.

கிண்ணியா பிரதேச செயலாளர்   எம். எச். எம். கனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிண்ணியா நகரசபை செயலாளர், உலமாசபை, சூறாசபை, கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் உலமாக்கள், மத்ரஸா மாணவர்கள் உட்பட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த படகுப் பாதை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்ளடங்கலாக பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணித் தாய் உட்பட 08 அப்பாவி பொது மக்களின் உயிர்கள் பறிபோயின.

இந்த குறிஞ்சாக்கேணி பாலம் கடந்த பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாதுள்ளது.

இப்பாலத்தை புனரமைப்பதற்கான அடிக்கல் கடந்த கால அரசியல்வாதிகளால் நடப்பட்டது.

எனினும், இப்பாலம் இதுவரை திருத்தப்படவில்லை.

இப்பாலத்தின் ஊடாக தினமும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் பயணம் செய்து வருகின்றனர்.

தற்போது இப்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது.

எனவே, இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால்    ரத்னசேகர அண்மையில் சென்று பார்வையிட்டார்.

மேலும், ஆளுங்கட்சியில் திருகோணமலை மாவட்டம் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவான வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இப்பாலத்தின் புனரமைப்புக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

எனவே, அநுரகுமார அரசாங்கத்தில் இதனை முழுமையாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



அண்மைய பதிவுகள்