வன்னியில் போட்டியிடுவதற்கு 22 அரசியல் கட்சிகள் 25 சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுத் தாக்கல், 4 குழுக்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

2 months ago



வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு 22 அரசியல் கட்சிகள் மற்றும் 25 சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தன என்றும், அவற்றில் 4 குழுக்களின்             விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன என்றும் வவுனியா மாவட்ட அரச அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்தார்.

வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர்          சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

"எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 4 ஆம் திகதி ஆரம்பிக்கப் பட்டு இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்திருந்தது.

அந்த வகையில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இம்முறை வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 24 அரசியல் கட்சிகளும், 27 சுயேச்சைக் குழுக்களும் என மொத்தமாக 51 குழுக்கள் வேட்புமனுக்களைக் கையளித்திருந்தன.

அவற்றில் இரண்டு அரசியல் கட்சிகள் மற்றும் இரண்டு சுயேச்சைக் குழுக்களின் விண்ணப்பங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்யப்பட்டு கையளிக்கப்படாத காரணத்தால் தேர்தல் அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டன.

எங்கள் மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீ ரெலோ கட்சியின் ப.உதயராசா போட்டியிடவிருந்த ஜனநாயகத் தேசியக் கூட் டணி ஆகிய அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டன.

அந்த வகையில் 22 அரசியல்        கட்சிகளினதும் மற்றும் 25 சுயேச்சைக் குழுக்களினதும் விண்ணப்பங்களும் என 47 குழுக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதற்கமைய 2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 6 நாடாளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதற்காக 423 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்." என்றார்.

அண்மைய பதிவுகள்