அவயவங்களை இழந்தவர்களின் மறுவாழ்வுத் திட்டம் -- கலிபோர்னியா ஓய்வு நிலை பேராசிரியர்,கனடா -இலங்கைக்கான வர்த்தக சபையின் இணைப்பாளர் தெரிவிப்பு

2 months ago



யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் கீழ் முப்பரிமாண தொழில் நுட்பத்தினூடாக வடக்கு - கிழக்கில் உள்ள அவயவங்களை இழந்த மக்களின் மறுவாழ்வை முன்னிறுத்தி விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக திட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலையின் ஓய்வு நிலை பேராசிரியர் காசி விஸ்வநாதன் செல்வகுமார் மற்றும் கனடா -இலங்கைக்கான வர்த்தக சபையின் இணைப்பாளர் குலா செல்லத்துரை ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

"இந்தத் திட்டம் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் மலேசிய நிறுவனம் ஒன்றால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் வரப்பிரசாதத்தை வன்னியில் அவயவங்களை இழந்து நாளாந்தம் பல்வேறு அவமானங்களையும் அசெளகரியங்களையும் எதிர்கொண்டு வருவோர் பெற்றுக்கொள்ளும் வகையில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த முப்பரிமாண பொறிமுறையூடான அவயவங்களை பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பான பயிற்சி. பட்டறை ஒன்றை இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதிமுதல் 9 ஆம் திகதிவரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க இலங்கையில் இருந்து 50 பேரை அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இதேநேரம், இந்த அவயவங்கள் முப்பரிமாண பொறிமுறையூடாக தயாரிக்கப்படுகின்றது.

ஆனாலும், இந்தத் தொழில் நுட்பம் இலங்கையில் இன்மையால் அதை இந்தியாவில் இருந்து முதற் கட்டமாக பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இதை யாழ். பல்கலைக் கழக பொறியியல் பீடம் முழுமையாக மேற்கொள்ளும்.

இதே நேரம் இந்தத் திட்டமானது யுத்தத்தில் பாதிக்கப்படு அவயவங்களை இழந்தவர்களுக்கு மட்டுமல்லாது ஏனைய விபத்து மற்றும் நோய்களால் அவயவங்களை இழந்தவர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - என்றனர்.