தமது கைதிகளை அரசியல் கைதிகளாக அடையாளப்படுத்திய ஜே. வி.பி, தமிழ் இளைஞர்களை, அரசியல் கைதிகள் இல்லை என்கிறது

3 months ago


 

தமது கைதிகளை அரசியல் கைதிகளாக அடையாளப்படுத்திய ஜே. வி.பி, தமிழ் இளைஞர்களை, அரசியல் கைதிகள் இல்லை என்கிறது.

"அரசியல் கைதிகள் இல்லை" என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கருத்து தொடர்பில் மனோ மேலும் கூறியதாவது-

"சிறையில் அரசியல் கைதிகள் இல்லை" என்ற கருத்தைத் தான் எப்போதும் எல்லா சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களிலும், எல்லா அமைச்சர்களும் சொன்னார்கள்.

அரசாங்க தரப்பு அப்படிதான் சொல்வார்கள்.

அவர்களுக்கு "பயங்கரவாதி". மக்களுக்கு "போராளி". பலஸ்தீனம் முதல் இலங்கை வரை, உலகம் முழுக்க போராட்டங்கள் நிகழ்ந்த நாடுகளில் இப்படி தான்.

இந்நாட்டில், 1971 இல் தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே ஆயுதம் தூக்கி பின்னர், 1989 இலும் ஆயுதம் தூக்கி ஜே.வி.பி போராட்டம் செய்த போது, கைதாகி சிறையில் இருந்த ஜேவிபி போராளிகளை, அன்றைய அரசாங்கம், "பயங்கரவாதிகள்" என்றது.

ஆனால் ஜே.வி.பியினர், “இல்லை, அவர்கள் அரசியல் போராளிகள்" என்றார்கள்.

2015-2019 ~ நல்லாட்சியிலும் இடைக்கிடை ஓரிரு அமைச்சர்கள் இப்படி சொன்னார்கள்.

ஆனால் அன்றைய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக இருந்து, அவர்களை கண்டித்து, அமைச்சரவைக்குள் அவர்களை புறந்தள்ளி, ஏனைய முற்போக்கு அமைச்சர்களுடனும், வெளியே தமிழ் தேசிய கட்சிகளுடனும் இணைந்து, கணிசமான தமிழ் அரசியல் கைதிகளை நாம் சத்தமில்லாமல் விடுவித்தோம்.

தமிழ் அரசியல் கைதிகளை அதிகமாக விடுவித்தது எமது நல்லாட்சி அரசாங்கம்தான்.

இதில் மாற்று பேச்சுக்கு இடமில்லை.

1971இல், தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே, ஆயுதம் தூக்கிய தமது அங்கத்தவர்களை அரசியல் போராளிகளாக அடையாளம் காணும் ஜே. வி.பி, கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களை, அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுகிறது.