தமிழகத்தில் கடல் வழியாக தஞ்சமடைந்த13 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள், தம்மை இலங்கைக்கு அனுப்பக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு
இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள், தம்மை இலங்கைக்கு அனுப்பக் கோரி, இந்தியா - இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கையளித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து படகு வழியாக சட்ட விரோதமான முறையில் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைய தொடங்கினர்.
இதுவரை 309 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் கடல் வழியாக அகதிகளாக தஞ்சமடைந்து மண்டபம் ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தஞ்சமடைந்த இலங்கை தமிழர்களை அகதிகளாக இந்திய அரசு இதுவரை பதிவு செய்யாத காரணத்தினால், அவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் எந்த விதமான நிவாரணம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அகதிகளாக பதிவு செய்யாமல் உள்ள 13 குடும்பத்தினர், படகு மூலம் அல்லது விமானம் மூலம் தம்மை இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு கோரி நேற்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கையளித்துள்ளனர்.
இதேவேளை, முகாமில் வருவாய் இன்றி தவித்த ஐந்து குடும்பத்தினர் அண்மையில் சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளதாகவும் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.