யாழ்.நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி இலஞ்சம் பெற்று தன்மீது தாக்குதல் நடத்தியதாக, மாற்றுத் திறனாளி குற்றச்சாட்டு
யாழ்.நெல்லியடி பொலிஸ் பொறுப்பதிகாரி இலஞ்சம் பெற்று தன்மீது தாக்குதல் நடத்தியதாக, மாற்றுத் திறனாளியான க.கிரிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடக சந்திப்பில் தெரிவித்ததாவது,
சிவில் வழக்கில் பொலிஸார் நேரடியாக தலையிட முடியாது. முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருக்க வேண்டும்.
மாறாக எதிராளிகளிடமிருந்து அதாவது வெளிநாட்டவரிடமிருந்து இலஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு நேரடியாக எனது வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தி எனது உடமைகளை தூக்கி வெளியே எறிந்தனர்.
பொலிஸாரின் ஆதரவுடன் என்மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. நான்கு நாட்களாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைபெற்று தற்போது வீடு திரும்பியுள்ளேன்.
பொலிஸாரின் இவ் அடாவடி தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவிலும், பொலிஸ் மாவட்ட பிராந்திய பொறுப்பதிகாரியிடமும் முறையிட்டுள்ளேன்.
பொலிஸார் இலஞ்சம் வாங்கிக் கொண்டு செயற்படும் விதத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்காவைச் சென்றடையும் வகையில் இதனை வெளிக்கொணர்கின்றேன் என்றார்.