அரசுக்கு எதிரானவர்களை கைது செய்து சித்திரவதை செய்ய பயன்படுத்திய “கண்ணாடிகளின் வீடு” ஷேக் ஹசீனாவின் இரகசிய சிறை தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்த நிலையில், அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் சில மாதங்களுக்கு முன் வன்முறையாக வெடித்தது.
இந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 500இற்கும் மேற்பட்டோர் பலியானர்.
இதனால், நாட்டில் பதற்ற நிலை ஏற்பட்டது.
ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜிநாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.
தலைநகர் டாக்காவிலிருந்து, சகோதரியுடன் இராணுவ விமானத்தில் வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.
ஹசீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்கள் கைது செய்யப்பட்டு, இரகசிய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் சிறைகளில் இருந்தபோது, சந்தித்த அனுபவங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதில், இரகசிய சிறை பற்றிய சில அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த சிறைகளை அயினா கோர் என அழைக்கின்றனர். கண்ணாடிகளின் வீடு என அதற்குப் பொருள்.
2009இல் ஹசீனா வின் ஆட்சி தொடங்கிய பின்பு நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்புப் படையினரால் பிடித்து செல்லப்பட்டனர்.
சில சமயங்களில் அரசுக்கு எதிராக சிறியளவில் போராட்டம் நடத்தியவர்களும் கூட சிக்கினர்.
அவர்களில் பலர் கொல்லப்பட்டு விட்டனர் என்றும் அவர்களின் உடல்கள் துண்டுகளாக்கப்பட்டு விட்டன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு சிலர் இரகசிய இராணுவத் தடுப்பு காவல் மையத்தில் வைக்கப்பட்டனர்.
அதுவே அயினா கோர் என அழைக்கப்பட்டது என தி நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹசீனா, அரசுக்கு சவாலாக இருக்கும் அனைவரையும் கட்டுப்படுத்தி அரசை ஒழுங்குபடுத்தி வைத்திருந்திருக்கிறார் என நம்பப்படுகிறது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த இரகசிய சிறை செயல்பட்டு வந்தது என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 700 பேர் காணாமல் போனவர்களில் அடங்குவார்கள் என மனித உரிமை அமைப்புகள் மதிப்பீடு செய்துள்ளன.
இந்த எண்ணிக்கை உண்மையில் அதிகரிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறை பிடித்து வைக்கப்பட்டவர்களில், சிலர், தங்களுடைய இடத்துக்கு மேலே காலையில் இராணுவ அணிவகுப்பு நடப்பதற்கான சத்தம் கேட்டது எனக் கூறுகின்றனர்.
சிறையில் உள்ளவர்களால், அவர்களைத் தவிர வேறு நபர்களை ஒருபோதும் பார்க்க முடியாது.
அதுவும் கண்ணாடிகளின் வீடு என பெயர் வருவதற்கு ஏதுவாகிவிட்டது.
விசாரணையின் போது, உடல் ரீதியாக நேரடியான சித்திரவதைகளக கைதிகள் சந்தித்தனர்.
சிறைக்குள் ஜன்னல்கள் இல்லை. வெளியுலகில் இருந்து எந்தவித செய்தியும் உள்ளே செல்லாது.
இதற்காக சிறை அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த சிறைகளின் அறைகள் ஒன்றுக்கு ஒன்று எதிராக இருக்கும்.
சிறை அறைகளில் பெரிய மின்விசிறிகள் ஓடியபடி இருக்கும்.
அது காவலர்களின் உரையாடல்கள் கைதிகளுக்கு கேட்கக் கூடாது என்பதற்காகவும், கைதிகளின் மனநிலை பாதிப்படைய செய்வதற்காகவும் இது போன்ற விடயங்கள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன என தி நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.