தமிழ் பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம் - இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

8 months ago


தமிழ் பொது வேட்பாளரை நாங்கள் ஆதரிக்கவில்லை. அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுத்துள்ளோம். நாம் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பில் வியாழக்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிக்கும் என்பதை இதுவரை தீர்மானிக்கவில்லை. அவசரப்பட வேண்டிய தேவை கிடையாது. வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு ஒருவாரத்துக்கு முன்னர் எமது தீர்மானத்தை அறிவிப்போம்.

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு ஒரு தரப்பினர் குறிப்பிடுவதை தமிழ் மக்கள் ஏற்கப் போவதில்லை. இவர்கள் ஒவ்வொரு தேர்தல்களின் போதும் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு குறிப்பிட்டுக் கொள்வார்கள். ஆனால் மக்கள் தேர்தலை புறக்கணிக்கவில்லை. இம்முறையும் தேர்தலை புறக்கணிக்கப் போவதில்லை.

தமிழ் பொதுவேட்பாளருக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அவர் எங்களின் கட்சி உறுப்பினர் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடடிக்கையை முன்னெடுத்துள்ளோம்.இதனுடாக எமது நிலைப்பாட்டை விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடந்த கால தேர்தல்களில் எமது நிலைப்பாட்டை இறுதி தருணத்தில் அறிவித்திருந்தோம்.அதற்கமைய 80 சதவீதமானோர் எமது தீர்மானத்துக்கு அமையவே வாக்களித்தார்கள். ஆகவே இம்முறையும் நாங்கள் குறிப்பிடும் வேட்பாளருக்கே எம்மக்கள் வாக்களிப்பார்கள் என்றார்.